சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே. காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் புனைவு மரணத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு நபர்களின் - காந்தியின் கோட்சே, கோட்சேயின் காந்தி - உளவியலை ஆராய்கிறது. அந்த உளவியல் விசாரணையே சக்கரியாவின் நாவல். “என் மனதுக்குள்ளிருக்கும் அரசியல் வளர்ச்சி நிலைகள் மிக இயல்பாகவே என் எழுத்தில் வெளிப்பட்டுவிடுகின்றன” என்று குறிப்பிடும் சக்கரியாவின் அரசியல் இலக்கியபூர்வமாகப் புலப்படும் நாவலே ‘இதுதான் என் பெயர்’.
சக்கரியா
சக்கரியா (பி. 1945) கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் உருளிக்குன்னத்தில் ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர். உருளிக்குன்னம், பாலா, மைசூர், பெங்களூர் ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். பெங்களூர், காஞ்ஞிரப்பள்ளி கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகையாளராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தவர். ‘ஏஷியாநெட்’ மலையாளத் தொலைக்காட்சியின் நிறுவன ஆலோசகர். இப்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். சொந்தப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் உட்பட இருபத்துமூன்று நூல்களுக்கு ஆசிரியர். சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என எல்லா இலக்கியப் பிரிவுகளிலும் ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார். அருந்ததி ராயின் ‘தி எண்ட் ஆஃப் இமாஜினேஷன்’ கட்டுரையை மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளார்.