Your cart is empty.
ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்
-
மனதின் அடுக்குகளையும் மறைந்திருக்கும் உணர்வுகளையும் இக்குறுங்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கதைகளில் வரும் சூழலையும் கூர்ந்து கவனித்து எழுதியுள்ளார். இக்கதைகள் வாழ்வின் சில தருணங்களின் மீது கவனம் குவிக்கின்றன. அவற்றினூடே வாழ்வின் விரிந்த பரப்பை நோக்கி வாசகரின் கவனத்தை ஈர்க்கின்றன.
புத்தரின் போதனையை மகாராஷ்டிர மக்களிடம் கொண்டுசெல்வதற்காகப் பெருமளவு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, தர்மானந்த கோஸம்பியின் வாழ்க்கை (1876 -1947). இந்தத் தொண்டு, ஒரு பௌத்த அறிஞராக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் அவர் மேற்கொண்ட கல்விப்புலப் பணிகளோடு இயைந்து செயல்பட்டது. ஒரு சிந்தனையாளராக அவர் சமத்துவம், உலக அமைதி இவை சார்ந்த கருத்துக்களைத் தேசிய எல்லைகளைத் தாண்டியும் பரப்ப முயன்றார். சோஷலிச சித்தாந்தத்தைப் பௌத்த அறவியலோடு பொருத்தி, இவ்விரண்டையும் காந்தியத்தின் வாய்மை, அஹிம்சை இவற்றோடு இணைத்துக் கொண்டுசெல்ல முனைந்தார்.
பௌத்தத்தை உயிர்ப்பித்து அதை வாழும் சமயமாக ஆக்கிய பெருமை தர்மானந்தரையே சாரும். பௌத்தத்தின் போதனைகளையும் நடைமுறைகளையும் மீட்டுக் கொண்டுவந்ததோடு நில்லாமல், சமகாலத்தியச் சமூக, அரசியல் சித்தாந்தங்களோடு அதற்குள்ள பொருந்தப்பாட்டையும் நிறுவிக்காட்டினார். புதியதொரு ஒருங்கிணைந்த உலகப் பார்வையை உருவாக்கினார். இதை எதற்காக, எவ்வாறு உருவாக்கினார் என்பதைத்தான் இந்தத் தன் வரலாறு விவரிக்கிறது.
-‘அலியும் நினோவும்’ நாவல், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யா, ஈரான், அஜர்பைஜான், ஜியார்ஜியா பகுதிகளின் கொந்தளிப்பான பின்னணியில் அமைந்த அழுத்தமான அழகான காதல் கதை. இஸ்லாமிய அஜர்பைஜானி இளைஞருக்கும் கிறிஸ்துவ ஜார்ஜிய இளவரசிக்கும் இடையிலான ஆழமான, சிக்கலான காதலைப் பேசும் இந்தக் கதை வரலாறு, அடையாளம், பண்பாடு என்கிற அடுக்குகளில் பயணித்துக் காலத்தை வெல்லும் படைப்பாக மாறுகிறது.
முதலாம் உலகப் போர் காலத்தில் சோவியத் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அஜர்பைஜான் நாட்டின் வரலாற்றையும் இக்காதல் கதையுடன் இணைத்திருக்கிறார் நாவலாசிரியர்.
இதுவரை 30 மொழிகளில் வெளிவந்து, 100 பதிப்புகளுக்கு மேல் கண்ட நூல் இது. திரைப்படமாகவும் வந்திருக்கிறது. பயணி தரனின் உயிரோட்டமுள்ள மொழியாக்கம் உலகப்
புகழ்பெற்ற இந்த நாவலைத் தமிழ் வாசகருக்கு நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது
-உலகெங்கும் உருவாகியுள்ள புலம்பெயர் எழுத்துகளில் தாயக ஏக்கமும் தாய்நாட்டிற்குத் திரும்பும் தாகமும் எதிரொலிக்கின்றன.
பொ. கருணாகரமூர்த்தியின் கதைகள் இந்த ஏக்கத்தையும் தாகத்தையும் படைப்பூக்கத்தோடு பிரதிபலிக்கின்றன. ஜெர்மன் வாழ்க்கையில் தமிழரின் ஊடாட்டத்தை நுணுக்கமாகப் பதித்திருக்கும் கருணாகரமூர்த்தியின் எழுத்து தனித்துவம் கொண்டது. ஐரோப்பியப் புகலிட வாழ்வுபற்றிய விரிவான சித்தரிப்பை இவருடைய கதைகள் தருகின்றன.
இயல்பாகக் கதை சொல்லும் ஆற்றல் கொண்ட கருணாகரமூர்த்தி கதைகளை லாவகமாக வளர்த்துச்செல்கிறார். புதிய தளங்களை அறிமுகப்படுத்தும் இவருடைய கதைகள், புதிய அனுபவங்களைத் தருகின்றன. வாழ்வின் வலிகளும் போதையூட்டும் தருணங்களும் இவருடைய கதைகளில் வெளிப்படுகின்றன. பாலியல் சார்ந்த சிக்கல்களையும் இக்கதைகள் தீவிரமாகக் கையாள்கின்றன.
-கறுப்பின மக்கள்மீதும் வெள்ளையர் அல்லாதோர்மீதும் அமெரிக்க நீதித்துறையும் அரசும் காட்டுகின்ற ஓடுக்குமுறை தெளிவானது. அதன் இரகசியமான ஒரு பக்கத்தை இந்த நூலில் பார்க்கலாம். அமெரிக்காவின் மக்களாட்சி முறையையும் அதன் குற்றவியல் நீதித்துறையின் நடுநிலைமை பற்றிய மாயைகளையும் இந்நூல் தகர்க்கிறது. ஆழ்ந்த துயரமும் ஆய்வு நேர்மையும் உணர்வின் அழகும் சேர எழுதப்பட்டிருக்கிறது நூல். அநீதிக்குத் தலைவணங்காத பலமான ஓர் எதிர்ப்புக் குரல் இந்நூலின் எல்லாப் பக்கங்களிலும் எதிரொலிக்கிறது.
-கலையுலகில் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்திய நூல் ஜான் பெர்ஜரின் 'கலை காணும் வழிகள்'. பிபிசி தொலைக்காட்சித் தொடரொன்றை அடியொற்றி எழுதப்பட்ட இந்த நூல் 1972இல் வெளியானது.
ஜான் பெர்ஜர் பண்டைய ஓவியங்களின் மீதிருக்கும் மாயப்போர்வையை விலக்கி அவற்றைப் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறார். படைப்புகளை அவற்றின் புதிர்ச் சிறையிலிருந்து விடுவிக்கிறார்.
பார்வையாளர்களுக்கும் படைப்புகளுக்குமான இடைவெளியைக் கணிசமாகக் குறைக்கிறார். ஓவியங்களைப் பார்க்கும் முறை மாறுகிறது. ஓவியங்கள் நமக்கு நெருக்கமாகின்றன.
நுட்பமான விவரணைகளும் ஆழமான அழகியல் பார்வைகளும் கொண்ட இந்த நூலைத் தமிழ் வாசகர்களுக்கு அணுக்கமான முறையில் மிக எளிமையாகத் தமிழாக்கியிருக்கிறார் பி.ஏ. கிருஷ்ணன்.
-ஆட்சிப் பீடத்தின் முன் நிற்கும் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலங்களின் போராட்டம்தான் இந்நாடகம். வருங்காலத்தைக் கணக்கில் கொண்டு நிகழ்காலத்தின் சூட்சுமங்களைப் பயன்படுத்திக்கொள்கிறவர் வெற்றியாளராகிறார்; ஔரங்கசீப் அத்தகைய வெற்றியாளர்! இவ்வெற்றியை அவர் இரத்தக்களரியோடு பெற வேண்டியிருக்கிறது; உறவுகளைத் துண்டாடிச் சுயநலம் பேண வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு விநாடியிலும் தன் இருப்பைத் தானே சோதித்தறிய வேண்டியிருக்கிறது. உளவியல் சிக்கல்களோடு நடக்கும் இவ்வாழ்க்கை பின்னர் தானாகவே ஒரு நாடகமாகிவிடுவது ஓர் அதிசயம்தான்.
வரலாற்று நிகழ்வுகளினூடே படைப்பூக்கம் மிகுந்த கற்பனையையும் உளவியல் பார்வையையும் செலுத்தி இந்திரா பார்த்தசாரதி இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார். வரலாற்றின் சில திரைகளையேனும் விலக்கி, எழுதப்படாத வரலாற்று உண்மைகளை அல்லது உண்மைகளாக இருந்திருக்கக்கூடிய சாத்தியங்களை நமக்குக் காட்டுகிறது இந்த நாடகம்.
-தமிழ்நாட்டு உயர்கல்விச் சூழலைக் களமாகக் கொண்ட நாவல். வளாக நாவல் (Campus Novel) என்ற இலக்கிய வகைமையின் புதிய வடிவத்தில் முன்னோடிப் படைப்பு என்று கருதத்தக்கது. புனைவு, அல்புனைவு, அனுபவப் புனைவு, அரசியல், வரலாறு, இலக்கிய ஆளுமைகள், பிரதிகள் தொடர்பான குறிப்புகள் போன்ற கதையாடல் இழைகள் பலவும் ஊடாடும் பிரதியாக இது பின்னப்பட்டுள்ளது. பகுதிகளைக் கொண்டு ஒரு களத்தின் முழுச்சித்திரத்தை உருவாக்கும் உத்தி இது.
சமகாலக் கல்விப் புலத்தின்மீது அடுக்கப்பட்டுள்ள பிரமைகளைத் தகர்க்கும் அதே வேளையில் அதன் மேலான பகுதிகளை இந்நாவல் உவப்புடன் முன்வைக்கிறது.
அங்கதம் இந்தப் பிரதியில் பிரதானமாகத் தொழிற்படுகிறது. அந்தத் தொனி விளைவிக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் பின்னாலுள்ள வருத்தமும் கோபமும் கவனம் கொள்ளத்தக்கவை.
-மக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் 'பிஞ்சுகள்’.
பள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகிய சிறுவர்கள் வழியாக மகிழ்ச்சியின் உச்சிக்கிளையைத் தொடுகிறது. ரப்பர் வில்லுடன் திரியும் திருவேதி நாயக்கர் பறவை வேட்டையை மாய ஜாலத்துடன் நிகழ்த்திக் காட்டுகிறார்.
வாழ்வின் அசைவுகளை இயற்கையின் துணையோடு புனைவுகளாக்கும் கி.ரா., சிறுவர்களோடு வளர்ப்பு மைனாக்கள், காகங்கள், நாய்கள், கிளிகளையும் இந்த நாவலில் பாத்திரங்களாக்கியிருக்கிறார். குழந்தைகளின் உலகைக் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் கண்டுணரும் விதமாக இயல்பாகப் படைத்திருக்கிறார்.
-தன் குடும்பத்தின் சரித்திரத்தை எழுதியிருக்கும் V.S. விசாலாக்ஷியம்மாள், பிரபல கல்வியாளர், சமூகச் செயல்பாட்டாளர் சகோதரி R.S. சுபலக்ஷ்மி (சுப்பலக்ஷ்மி என்றும் எழுதுவதுண்டு சிலர்) அவர்களின் அன்னை ஆவார். அவர் எழுத்தாளர் இல்லை. இந்த நூலைத் தவிர்த்து வேறு நூல்களை அவர் எழுதவில்லை. கூட்டுக் குடும்பத்தில் உறவுகள், பகை, கல்வி, திருமணம், சடங்குகள், பெண்-ஆண் உறவு இவை பற்றிய தகவல்கள், காலப்போக்கில் நேர்ந்த மாறுதல்கள் இவற்றைப் பதிவு செய்யவே இதை எழுத முற்பட்டார் விசாலாக்ஷி. இதை அவர் குடும்பமே வெளியிட்டுள்ளது.
-பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக்குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். 'பழைய யானைக் கடை', 'தேனொடு மீன்', 'மாலை மலரும் நோய்' முதலியவற்றின் வரிசையில் இப்போது ‘களிநெல்லிக்கனி.' தமிழ் மரபில் பெண் புலவருக்கு 'ஔவை' என்னும் பொதுப்பெயர் சூட்டுதல் வழக்கமாக இருந்திருக்கிறது. ஏறத்தாழ எட்டு ஔவையார்கள் எழுதிய பல நூல்களையும் முழுமையாக வாசித்துப் பொருளுணர்ந்து, உரை இல்லாதவற்றையும் முயன்று கற்று இந்நூலை எழுதியிருக்கிறார். நவீன இலக்கிய வாசகர்களுக்கு மரபிலக்கியக் கவிச்சுவையை உணர்த்தும் நோக்கம் கொண்ட நூல் இது. எளிய மொழி, மென்மையான விமர்சனம், சுயபகடி, கவிச்சொல்லைச் சிக்கெனப் பிடித்து விதந்தோதல், மரபிலக்கியம் மீதான மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு தேன் தடவிய விரலால் இசை எழுதியிருக்கும் இந்நூல் வாசிக்க வாசிக்க நாவூறச் செய்கிறது.--